சென்னை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது என தெரிவித்து வருகிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தலைவர்கள் எக்ஸ் தளத்தில் வரவேற்பு பதிவிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதி தான். இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

அதிமுக

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.திமுக-வைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 

என்று தெரிவித்துள்ளனர்