சென்னை

ன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் இன்று ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.  அவர்களுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அந்த விவரங்கள் வருமாறு

முதல்வர் முக ஸ்டாலின் : சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசி தீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி : சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

வைகோ : உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாக திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமலஹாசன் : இயன்றதை கொடுங்களென வலியுறுத்தும் தியாக திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.

மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தலைவர்கள், திருநாவுக்கரசர், விஜய் வசந்த்,  பாமக தலைவர் ராமதாஸ், தாமாகா தலைவர் ஜி கே வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய அன்பர்களுக்குப் பத்திரிகை.காம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.