சென்னை: தமிழ் மொழியில் சட்ட பாடப்புத்தகங்கள்   உள்பட 28 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி சட்டத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர்.

இதைத்தொடர்ந்து சட்டத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இறுதியில் பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

  1. அரசு சட்டக்கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பித்திட ஏதுவாக ரூ.10 இலட்சம் செலவில் “ஆசிரியர் மேம்பாட்டு திட்டப்பயிற்சி” வழங்கப்படும்.
  2. தமிழில் சட்டம் பயில விரும்பும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் சட்ட முன் படிப்பு பாடப்புத்தகங்கள் ரூ.22 இலட்சம் செலவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் விநியோகிக்கப்படும்.
  3. அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு புதுமையான கற்றல் அனுபவத்தை (Innovative Learning Experience) அறிமுகப்படுத்துவதற்கும், அவர்களின் சட்ட ஆய்வு திறனை (Legal Research Skills) மேம்படுத்தவும் ரூ.1 கோடி செலவில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் தலா ஒரு திறன் வகுப்பறை (Smart Class) அமைக்கப்படும்.
  4. அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டக்கல்வியில் தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்குவதற்காக ரூ.1 கோடி செலவில் அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் மின் நூலகம் (e-library) அமைக்கப்படும்.
  5. அரசு சட்டக்கல்லூரிகளில் பயிலும் 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 36 இலட்சம் செலவில் சர்வதேச பயிற்சிப் பட்டறை நடத்தப்படும்.
  6. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மிகச் சிறந்த சட்டக்கல்லூரிகள், தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாட்டுச் சட்டப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான ‘மாணவர் பரிமாற்ற திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  7. திருச்சிராப்பள்ளி அரசு சட்டக்கல்லூரி, கோயமுத்தூர் அரசு சட்டக்கல்லூரி, மதுரை அரசு சட்டக்கல்லூரி மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி ஆகிய சட்டக்கல்லூரிகளிலுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் ரூ. 3 கோடி செலவில் புனரமைக்கப்டும்.
  8. திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு இவ்வாண்டு ரூ.2.5 கோடியும்,மேலும் வரும் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடியும் தொகுப்பு நல்கை நிதி வழங்கப்படும்.
  9. திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர் தங்கும் பொருட்டு கூடுதல் மாணவியர் விடுதி கட்டப்படும்.
  10. சட்டத்துறை நூலகத்தில் தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்குவதற்காக ரூ.31 இலட்சம் செலவில் மின் நூலகம் (e-library) அமைக்கப்படும்.
  11. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  12. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒரு சார்பு நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  13. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சார்பு நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  14. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  15. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஸ்ணத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  16. குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக மாவட்ட நீதிபதி நிலையில், சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், இராமநாதபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மூன்று கட்டங்களாக அமைக்கப்படும்.
  17. திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளியில் மாவட்ட நீதிபதி நிலையில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படும்.
  18. நீதிமன்ற தீர்ப்புரைகள், சட்டம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் இதர தேடல்களை எளிமையாக்கும் விதமாக குற்ற வழக்குத் தொடர்வுத் துறையிலுள்ள 325 குற்ற வழக்கு நடத்துநர்களின் பயன்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் சுப்ரீம் டுடே AI மென்பொருளை (Supreme Today AI Online) அதன் ஒரு வருட சந்தா தொகையான ரூ.13,03,900/- செலவினத்தில் வாங்கி வழங்கப்படும்.
  19. குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககத்தின் பயன்பாட்டிற்கு ரூபாய் 10,21,138/- செலவினத்தில் புதிய அலுவலக அறைகலன்கள் கொள்முதல் செய்யப்படும்.
  20. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கட்டடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூபாய் 5 கோடியிலிருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  21. 150 ஆண்டு கால பழமையான மத்திய சிறை வளாகங்கள், பிற மாவட்டச் சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் ரூபாய் 20 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  22. சேலம் மாவட்டத்தில், இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துடன் கூடிய 800 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் மாவட்டச் சிறை, 100 பெண் சிறைவாசிகளை அனுமதிக்கக் கூடிய வகையில் பெண்கள் தனிக் கிளைச்சிறை மற்றும் 50 சிறைவாசிகளை அனுமதிக்கக் கூடிய வகையில் திறந்தவெளிச் சிறை ஆகியவற்றுடன் மாவட்டச் சிறைசாலை வளாகம் கட்டப்படும்.
  23. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்காக, இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துடன் கூடிய 500 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் புதிய மாவட்டச் சிறைச்சாலை வளாகம் நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
  24. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் கூடுதலாக 300 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில், இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துடன் கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும்.

25.நன்னடத்தை பிரிவில் பணிபுரியும் 12 மண்டல நன்னடத்தை அலுவலர்கள் மற்றும் 64 நன்னடத்தை அலுவலர்களுக்கு

76 கணினிகள் மற்றும் துணைப் பொருட்கள் ரூபாய் 59.00 இலட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

26.சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் பணியாளர்களிடையே தகவல் தொடர்பை விரைவுப்படுத்தும் வகையில், துறையின் அனைத்து களப்பணியாளர்கள் மற்றும் சீர்திருத்தப் பணியாளர்களுக்கு ரூபாய் 14.00 இலட்சம் செலவில் CUG SIM கார்டுகள் வழங்கப்படும்.

  1. சிறைவாசிகளுக்கு புதிய உணவு முறைப்படி உணவு தயாரிப்பதற்கு ஏதுவாக 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் 14 மாவட்டச் சிறைகளுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் ரூபாய் 1.26 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
  2. சிறைகளில் அசாதாரண சூழ்நிலைகளின் போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏதுவாக, பழைய லத்திகள், கேடயங்கள் ஆகியவற்றிற்கு பதிலாக 90 புதிய பாலிகார்பனேட் லத்திகள், கேடயங்கள் மற்றும் கலவர தடுப்பு கவச உடைகள் ஆகியன ரூபாய் 12.00 இலட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்

இவ்வாறு கூறினார்.