சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு கள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடு பவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும், விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து சட்ட அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். ஆன்லைன் தடை சட்டம் ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திமுக ஆட்சியில், அந்த சட்டத்தில் மேலும் ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாதபடி சட்டம் மசோதா தயாரிக்கப்பட்டு, இன்று அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆன்லைன் ரம்பி உள்பட சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழகஅரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்ப்பட்ட நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதால் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில், குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது. இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.
இணையவழி விளையாட்டின் பரவல், குறிப்பாக அடிமையாக்கும் இணைய வழி விளையாட்டுகள் மற்றும் இணையம் வழியாக விளையாடப்படும் சூதாட்ட விளையாட்டுகள் அரசின் முயற்சிகளை முறியடிக்க அச்சுறுத்துகிறது. முதலாவதாக மின்னணு தகவல் தொடர்பு மூலம் சூதாட்டமானது எல்லா நேரங்களிலும், எல்லா இடத்திலும் தொலை தொடர்பு திறன் கொண்ட சாதனத்தை அணுகக் கூடிய நபர் எவருக்கும் கிடைக்கிறது.
இரண்டாவதாக இணைய வழி சூதாட்டம் மனிதர்கள் அல்லாத கணினி பங்கேற்பாளர்களுடன் போட்டியிடும் வீரர்களை உள்ளடக்கியது. அவை பல்வேறு கணினி நெறிமுறைகளாக கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தகைய தொலைதூர விளைாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லது திறமையின் படிநிலை தொடர்புடைய கணினிநெறிமுறை அல்லது நிரலாக்கத்தை தனியாக மதிப்பீடு செய்ய முடியாது. இறுதியாக தொலை நிலையான சூதாட்டம் பெரும்பாலும் மாநிலங்களின் நிதிக் கண்காணிப்பை தவிர்த்து இணைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் டோக்கன் மூலம் நடைபெறுகிறது.
இவ்வாறு இணைய சூதாட்டம் மக்களின் மனநலத்தை கணிசமாக பாதிக்கிறது. மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மாநில மற்றும் அதன் மக்கள் தொகையில் நீண்ட கால வாய்ப்புகளை பாதிக்கிறது. இதே போல் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் போன்ற தொடர்பில்லாத பிற இணைய வழி விளையாட்டுகளும் தனிப்பட்ட குடும்ப, சமூக, கல்வி, தொழில் அல்லது பொதுமக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப் பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விளையாட்டுகளினால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக நுண்ணறிவு பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியன குறைகின்றன.
இதனால் இணைய வழி சூதாட்டம் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை மற்றும் தகுதி வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளை வடிவமைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் போது அது பொது ஒழுங்கிற்கான அச்சுறுத்தலை பன்மடங்கு அதிகரிக்கிறது. இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதனின் இணைய வழி பதிபானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும். அத்தகைய விளையாட்டுகள் எந்திரத்துடன் விளையாடக்கூடியவை. அத்தகைய விளையாட்டு முறைகளை மேற்பார்வையிட இயங்கமைவு ஏதுமில்லை மற்றும் அந்த விளையாட்டுகளை கையாளவும் தொடர் ஈடுபாட்டிற்கு விளையாட்டாளர்களை கவர்ந்திழுக்கவும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படலாம் என்பது போன்ற பல்வேறு வரைக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது.
மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்து ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.
அப்போது சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்த காரணத்தினால், அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாயிற்று. அதற்கிணங்கிய வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசர சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடு பவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.