மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மலை மாவட்டங்களில் நடைபெற்ற ‘பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பை’த் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.

மே 2023 இல் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்ட்டே மற்றும் அண்டை மலைப்பகுதி சார்ந்த குகி சமூகங்களுக்கு இடையே இன வன்முறை வெடித்ததில் இருந்து இதுவரை 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த சர்ச்சைக்கு சுமார் ஒன்றரை வருடம் கழித்து, அப்போதைய மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் பிப்ரவரி 9, 2025 அன்று ராஜினாமா செய்ததை அடுத்து, பிப்ரவரி 13, 2025 அன்று மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது மட்டுமே இந்த இன வன்முறைக்கு தீர்வு என்று கூறப்பட்ட நிலையில் மெய்தீ மற்றும் குகி குழுக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், காக்சிங் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக-வைச் சேர்ந்த தங்கா தொகுதி எம்எல்ஏ ராபின்ட்ரோ, “மெய்டெய் மற்றும் குகி குழுக்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இவர்களுக்கு இடையே விரைவில் அமைதி ஏற்படும் என்று நம்புகிறோம்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசு விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

மேலும், “தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்குள் (பாஜக எம்எல்ஏக்கள்) எந்த இயலாமையோ அல்லது வேறுபாடுகளோ இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். மணிப்பூரைப் பிரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஒரே மாநிலமாக ஒற்றுமையாக இருப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து முடக்கிவைக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2027 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.