சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து  மாவட்ட எஸ்பி-க்கள், ஐஜி-க்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாதத்துடன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய டிஜிபியாக, சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். அதுபோல சென்னை மாநகர காவல் ஆணையராக சந்திப்ராய் ரத்தோர் பதவி ஏற்றார். மேலும் பல மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில், கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டி தற்கொலை செய்துகொண்ட விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் கொலை, கொள்ளை சம்பங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், காவல்துறை உயர்அதிகாரிகள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் உள்பட  ஐஜிக்கள், மாவட்ட காவல் அணையர்கள், கண்காணிப்பாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இன்றைய ஆலோசனையின்போது, காவல்துறையினரின் மனஅழுத்தம் போக்கும் வகையில் நடவடிக்கை மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களை அடியோடு வேரறுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.