சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில்,  விருதுநகர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை 2 சிறுவர் உட்பட 5 பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக்கேட்டு வருத்தம் அடைந்தேன்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினமும் நடந்து வருவது கடும்கண்டனத்துக்குரியது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல்குற்றங்கள் தடுக்கப்படும்.

பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் ரீதியாக நிகழும் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு  கூறியுள்ளார்.