டெல்லி: தஞ்சை தனியார் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் விடுதியில் படித்து வந்தார். அவர், கடந்த ஜனவரி 9ம் தேதி திடீரென பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. இது குறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அங்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, அதன் அறிக்கை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் அனுப்பியது. அதில், அரியலூர் மாணவி லாவண்யா தங்கியிருந்த விடுதி அனுமதி பெறவில்லை என்றும், அதை உடனே மூட உத்தரவிட்டதுடன், மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று கூறியது. இதனைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் தங்களையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள குழந்தைகள் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.