இதோ அதோ என்ற ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் ரசிகர்களைக் கூட்டி, போர் அறிவிப்பு செய்தார் ரஜினி. இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட சிலருடன் அரசியல் ஆலோசனை நடத்தினார். பிறகு காலா படப்பிடிப்பில் மூழ்கிவிட்டார்.
இந்த நிலையில் அதிரடியாக அரசியல் ட்விட்டுகளை அள்ளி வீசிய கமல், அரசியல் கட்சி துவங்குவேன் முதல்வர் ஆவேன் என்கிற அளவுக்கு வந்துவிட்டார். ஆனால் ரஜினி பக்கமிருந்து பலத்த மவுனம்.
தற்போது லைம்லைட்டில் இருப்பவர் கமல்தான். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த சோர்வில் இருக்கிறார்கள் என்று
இந்த நிலையில், தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக “அரசியல் பிரவேச ஆலோசனை கூட்டங்களை” மாவட்டம் முழுதும் நடத்த ஆரம்பித்திருக்கிறார் மாவட்ட தலைவர் ரஜினி கணேசன்.
இது குறித்து இவரிடம் பேசினோம்:
“கமல் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகும் ரஜினியின் மவுனம் தொடர்வது அவரது ரசிகர்களை விரக்தி அடைய வைத்துவிட்டது என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
எப்போதும்போல ரஜினி ரசிகர்களான நாங்கள் உத்வேகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறோம். தஞ்சை மாவட்டம் முழுதும் மன்ற செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த ஆரம்பித்திருக்கிறோம். சில நாட்களுக்கு முன் பூதலூர் ஒன்றிய “அரசியல் பிரவேச ஆலோசனை கூட்டம்” சிறப்பாக நடந்தது” என்றார் ரஜினி கணேசன்.
அவரிடம், “முதல்வராவேன் என்று கமல் அறிவித்ததது பற்றி ரஜினி ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள்” என்றோம்.
“தஞ்சை மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியத்தில் எங்கள் ரஜினி மன்ற கூட்டம் நடந்தபோது 200 டுவீலர் 25 கார்களில் என்னை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். பெரும் கூட்டம் கூடியது. எல்லோரும் உற்சாகமாக, ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசித்தோம். இதே ஒன்றியத்தில் இத்தனை எழுச்சியுடன் கமல் ரசிகர்களால் கூட்டம் நடத்த சொல்லுங்கள், பார்ப்போம்! இங்கு மட்டுமல்ல.. தமிழகம் முழுதும் ரஜினி ரசிகர்கள் எழுச்சியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கமல் ரசிகர்கள் மத்தியில் கனத்த மவுனம்தான் நிலவுகிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் கமல் தற்போது, “முதல்வர் பதவிக்கு வருவதாக நான் சொல்லவில்லை” என்று கூறிவிட்டார்” என்றார் ரஜினி கணேசன்.
“ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி மன்றங்களுக்கு ஏதும் சொல்லப்பட்டிருக்கிறதா” என்றோம்.
அதற்கு ரஜினி கணேசன், “ஏற்கெனவே மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினி சந்தித்தார். வரும் அக்டோபர் மாதம், மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அதன் பிறகு அவரது அரசியல் வியூகங்கள் வெளிப்படும். அரசியல் பயணம் ஸ்பீடா ஆரம்பிக்கும்” என்றார்.
அவரிடம், “ஏற்கெனவே ஒரு முறை, “ரஜினி நல்லவர்தான். அவரது மனைவி லதா மற்றும் சிலர் சொல்பேச்சை கேட்டு ரஜினி இடையில் மாறினார்” என்றீர்கள். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிலும் லதா உள்ளிட்டோரின் தலையீடு இருக்காதா” என்றோம்.
அதற்கு ரஜினி கணேசன், “மன்றத்தினரைக்கூட, சுயநலமா செயல்படறவங்களை வெளியேறிடுங்கன்னு தலைவர் வெளிப்படையா சொல்லிட்டாரு. அதேதான் மற்றவங்களுக்கும். லதா உட்பட எவரது தலையீடும் இல்லாமல்தான் சிறப்பாக அரசியிலில் செயல்படுவார் எங்கள் தலைவர்” என்று முடித்தார் ரஜினி கணேசன்.