டெல்லி: தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளையும் செய்தியாளர்க்ளை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரச் சலுகை குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டு வருகிறார்.
3 நாட்களில் சிறு குறு தொழில் துறையினர், விவசாயிகள், நடுத்தர மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சிறப்பு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், 4ம் நாளான இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிலக்கரி, கனிமச் சுரங்கங்கள், ராணுவ உற்பத்தி, விமானப் போக்குவரத்து, மின்சாரத் துறை, சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள், விண்வெளி, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்துமே பூஜ்யம், வாழ்க இந்திய ஜனநாயகம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது அறிவிப்புகளால் ஏழைகளுக்கும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் எவ்வித பலன்களும் இல்லை என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் 5ம் நாளாக நாளையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பில் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.