டில்லி

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய அரசு வெகு நாட்களாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தி வருகிறது.  இதன் மூலம் வருமான வரி ஏய்ப்பை நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது.   மேலும் அனைவரது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைப்பதன் மூலம் வருமான கணக்கெடுப்பும் சுலபமாகும் எனச் சொல்லப்படுகிறது.

பான் கார்டு வைத்திருப்போர் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.  அதையொட்டி பலமுறை பான் கார்ட் மற்றும் ஆதார் இணைப்புக்கான இறுதித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  இறுதியாக இந்த வருடம் மார்ச் 31 அதாவது இன்று இணைப்புக்கான இறுதி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருமான வரித்துறையின் குறை தீர்க்கும் குழுவின் உத்தரவுப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதி 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.