கொல்கத்தா

ரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்து எதிரான பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மத்திய பாஜக அரசு அடக்குமுறை நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.  அதற்கேற்றாற்போல் மத்திய அரசின் சிபிஐ, தேசிய புலனாய்வுத்துறை, வருமானவரித் துறை அமலாக்கத்துறை ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்களிடம் சோதனை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தை அவர் எதிர்க்கட்சி தலைவர்களான சோனியா காந்தி, சரத்பவார், முக ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில்,  “நாம் அனைவரும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும்.  ஆளுநர் மூலம் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரச்சினை கொடுக்கிறது. குறிப்பாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக உறுப்பினர்களை போலவே செயல்படுகின்றனர்.

மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறது. மேலும் திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அமலாக்கத்துறை மூலம் மிரட்ட பாஜக நினைக்கிறது.  இந்தியா முழுவதும் ஒற்றை கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவர வேண்டும் என பாஜக நினைக்கிறது.

எனவே பாஜகவுக்கு எதிரான இந்த போரில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். விரைவில் அதாவது 5 மாநில தேர்தல்கள் முடிந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.