டில்லி
கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் ரு.95,760 கோடி மோசடி நடந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இத்தொடர் 20 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன், சிவசேனாவின் விநாயக்ராத், திமுகவின் டி ஆர் பாலு, பகுஜன் கட்சியின் டேனிஸ் அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத் தொடரில் சோனியா காந்தி குடும்ப பாதுகாப்பு விலக்கல், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை, மகாராஷ்டிர விவசாயிகள் பிரச்சினை, காஷ்மீர் விவகாரம் போன்ற பலவற்றைக் குறித்து கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களவையில் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,”இந்திய ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இத்தகைய வங்கி மோசடிகளைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன ” எனத் தெரிவித்துள்ளார்.