வோடபோன், ஏர்டெல் வழியில் கட்டணம் உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ

Must read

டில்லி

வோடபோன் மற்றும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.   இதனால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.   இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு அளிக்க வேண்டிய உரிம நிலுவைத் தொகை, அதற்கான அபராதம் மற்றும் வட்டியாக ரூ.74000 கோடி செலுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  இதற்குக் கடைசி தேதி வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் வரும் டிசம்பர் மாதம் முதல் தங்கள் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்தி உள்ளன.  இதுவரை தனது கட்டணங்களை உயர்த்தாத ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்னும் சில வாரங்களில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த கட்டண உயர்வு  பற்றித் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இக்கட்டண உயர்வு இணையதள பயன்பாடு, மற்றும் டிஜிட்டல் மய வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article