சென்னை: காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் 19 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு பொத்தே காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தைச்சேர்ந்த தனியார் மாணவர் விடுதிகளில் இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை நடத்தினார். முன்னதாக, தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகள், கஞ்சா சாக்லெட், ஹுக்கா உள்பட ஏராளமான போதை பொருட்கள் பறிமுதல் எசெய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த கல்லூரியைச் சேர்ந்த சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சோதனையில்கிடைத்தது என்ன என்பது குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனியார் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான, 500 அடுக்குமாடி வீடுகளில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி சோதனை நடத்தியதாகவும், அதில், கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம் எல் பறிமுதல் பாங் 5, ஸ்மோக்கிங் பாட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக 19 மாணவர்களை பிடித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்ட உள்ளது.