சென்னை,
தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது, அக்.23ந்தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
பத்திரப்பதிவுக்கான தடையை நீக்க நிலபுரோக்கர்கள் மற்றும் அரசும் பல முறை கோரிக்கை வைத்தும், தடையை நீக்க ஐகோர்ட்டு மறுத்தது.
மேலும் பத்திரப்பதிவை முழுமையாக தடை செய்யவில்லை என்றும், அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் மீண்டும் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நில புரோக்கர்கள் மற்றும், ரியல் எஸ்டேட் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், 8 மாதமாக தடை நீடிப்பதால் வாங்கிய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை என கூறினர்.
அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை தளர்த்தி புது உத்தரவை வழங்கினர்.
அதில்,கடந்த 2016 அக்., 23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம என்றும், சாலைகளுக்கு 20 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், விளைநிலங்கள் விஷயத்தில், தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர். அதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர்.நிலங்களை வரைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 7ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.