ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மாட்டுத்தீவன ஊழல்ர குற்றச்சாட்டில் சிக்கி, பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி நிறுவனருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து வித சோதனைகளும் செய்யப்பட்டன. அதில், லாலுவுக்கு கடுமையான நுரையீரல் தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவை நேரில் சந்திப்பதற்காக தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு விரைந்தனர். அங்கு லாலுவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், தற்போது லாலுவின் உடல்நிலை சீராகி வருவதாகவும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், ரிம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது.