ராஞ்சி:

நெஞ்சுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று பீகாரின் ராஞ்சி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைகாகக  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நேற்று டில்லி மருத்துவமனையில் லாலுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்று நலம் விசாரித்ததை தொடர்ந்து, மத்திய அரசின் மறைமுக அச்சுறுத்தலின் பேரில், எய்ம்ஸ் நிர்வாகம், லாலு பிரசாத் யாதவை உடனடியாக வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து மாநில போலீசாரால் அழைத்து வரப்பட்ட லாலு,  ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலி காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலு, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.