இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் சென்னை கிளையில் வாடிக்கையாளர் சேவையில் லட்சுமி என்ற ரோபாட் நியமிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கேட்கும் வங்கி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வங்கியில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கிறது? ஹோம் லோன்களுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? போன்ற 125-க்கும் மேற்ப்பட்ட வங்கி தொடர்பான கேள்விகளுக்கு லட்சுமியால் இப்போது அற்புதமாக பதிலளிக்க முடியும். அதனால் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு “வங்கி மேனேஜரை தொடர்பு கொள்ளுங்கள்” என்று கூறிவிடும். மேலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் கேள்விகளை வங்கி நிர்வாகம் சேகரித்து வருகிறது. உங்கள் வங்கி கணக்கு விபரங்கள் போன்ற தனிப்பட்ட விஷயங்களை வாயில் சொல்லாமல் ஸ்கிரீனில் காட்டிவிடும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள மேலும் 25-30 வங்கி கிளைகளில் இந்த ரோபோ வைக்கப்படும் என்று இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி தெரிவித்துள்ளார்
லட்சுமி ரோபாட்டை வடிவமமைத்தவர் கோவையைச் சேர்ந்த விஷ்ணு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த விஜய் வி ஷா ஆவார். தற்போது லட்சுமி ஆங்கிலத்தில்தான் பேசிவருகிறது. இதை அழகுத் தமிழில் பேசவைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர் சேவைக்கு ரோபாட்டை பயன்படுத்தும் இதே போன்றதொரு முயற்சியில் ஹெச்டிஎப்சி வங்கியும் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.