சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கி 22ந்தேதி முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இன்று (25ந்தேதி) வேட்புமனு வாபஸ் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மேல்மருவத்தூர்  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாளின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர் ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட முன்வராத நிலையில், மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த அவரது மகன் ப. செந்தில்குமார் தனது மனவை வாபஸ் பெற்றார். இதனால் லட்சுமி பங்காரு அம்மாள் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.