சீனாவில் கடந்த வாரம் இறுதியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சுமார் 50 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டதால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணிக்கணக்கில் சைக்கிள் ஒட்டிய இவர்கள் வழிநெடுகிலும் அவ்வப்போது தேசிய கீதத்தை பாடியும் தேசிய கொடியை அசைத்த படியும் சென்றனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் இரவு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக அப்படி செய்தார்களா என்றால் அது தான் இல்லை, இவர்கள் அனைவரும் செங்சோவு நகரில் இருந்து (Zhengzhou) 40 மைல் தொலைவில் உள்ள கைஃபெங் (Kaifeng) நகரின் பிரபலமான சூப் டம்பளிங் (soup dumpling) சாப்பிட சென்றுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் செங்சோவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இப்படி இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று சூப் டம்பளிங் சாப்பிட துவங்கிய நிலையில் இதுகுறித்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இதைக் கண்ட சகமாணவர்கள் ஆர்வமிகுதியால் கைஃபெங் நகரின் பிரபல சூப் டம்பளிங்-கை சுவைக்க சைக்கிளில் செல்ல துவங்கினர்.

நாளடைவில் ஆயிரக்கணக்கானோர் வார இறுதி நாட்களில் இப்படி சைக்கிளில் கிளம்பிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 17,000த்தை தொட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் இது 10 மடங்கு அதிகரித்து சுமார் 1 முதல் 2 லட்சம் மாணவர்கள் சைக்கிளில் பேரணி போல் சூப் டம்பளிங் சாப்பிட கைஃபெங் நகருக்கு கிளம்பியதால் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், சாலைகளின் குறுக்கே சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றதால் அந்நகர மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.

லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் கிளம்பி வந்ததால் நகரமே குப்பைகூளமாகக் காட்சியளித்தது.

இதையடுத்து சுதாரித்த நகர நிர்வாகம் மாணவர்கள் இரவு நேரங்களில் சைக்கிளில் வர அனுமதி மறுத்திருப்பதுடன் பல்கலைக்கழகம் மூலமாக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.