சேலம்: சேலம் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஏரி உடைந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன், அந்த பகுதி மக்களும் உதவியின்றி தவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.
இதனால் ஏரியில் இருந்து பாய்ந்தோடி வந்த தண்ணீர், அந்த பகுதியில் உள்ள கிராமத்தை சூழ்ந்தது. இதனால் 50க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. சில சிறிய ஓட்டு வீடுகள் இடிந்தும் விழுந் தன. இதனால் அங்கு குடியிருந்தவர்களின் அரிசி உணவு உடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் மூழ்கி வீணானதுடன், பல பொருட்கள் வெள்ள் நீரிலும் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், வளர்ப்பு பிராணிகளான ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளும் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை கிராம மக்கள் தேடி வருகின்றனர்.
மழைநீரால் வீடு இடிந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஏரியை சரிசெய்ய ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.