தொற்று நோய் வழிகாட்டு நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டது முதல் தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி போடுவதில் மெத்தனம், மருத்துவ உள்கட்டமைப்பில் இந்தியாவின் நிலை வரை அனைத்து காரணங்களாலும் உலகிலேயே மோசமாக தொற்று நோய் பரவும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று போர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் சொற்ப எண்ணிக்கையிலான தடுப்பூசி ஆகிய காரணங்களால் உலகிலேயே அதி வேகமாக தொற்று பரவும் நாடாக மாறிவருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி புதிய உச்சத்தை தொடுகிறது. பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைவிட உலகிலேயே அதிகளவு தினசரி பாதிப்பு இந்தியாவில் தான் உள்ளது.
சமூக இடைவெளி மற்றும் தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு மக்கள் சாதாரண நடைமுறைக்கு திரும்பியுள்ளதும், கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க தயங்குவதும் பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு விதித்துள்ளது.
மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் அந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கி இருப்பதும் கடந்த ஓராண்டில் எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லாதது பாதிப்பை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை 6.3 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இது அமெரிக்கா (34.5%) பிரேசில் (9.5%) மெக்ஸிகோ (7%) ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் மந்தகதியில் உள்ளது.
கோவிட் -19 க்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டு தேவை பற்றாக்குறை சந்தித்தது வரும் நிலையில், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்தியாவில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடுவதற்கான மருத்துவமனைகள் போதுமானதாக இல்லை.
உள்நாட்டு தேவைக்கான உற்பத்தியில் கவனம் செலுத்துவதற்காக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறது, இதனால் பிரிட்டன் போன்ற நாடுகள் பாதிக்கப்படும் என்றபோதும், சர்வதேச தடுப்பூசி மானிய திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை நாடுகளை இது கடுமையாக பாதிக்கும்.
உலகளவில் இதுவரை 87 சதவீத தடுப்பூசிகள் பணக்கார மற்றும் நடுத்தர நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல ஆப்ரிக்க நாடுகளுக்கு அதன் மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகள் ஓராண்டுக்கு முன்னரே தடுப்பூசி வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதால் அந்நாடுகள் தங்கள் மக்களுக்கு மிக விரைவாக தடுப்பூசி போட்டுள்ளன. அதே நேரத்தில், தடுப்பூசி பற்றாக்குறை என்பது இந்தியாவுக்கு புதிதான ஒன்று அல்ல.
நன்றி – போர்ப்ஸ்