சென்னை

காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி ஐபிஎஸ் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ரோந்து நடத்தி உள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக பிரிவில் இருந்து  ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றவர் ரம்யா பாரதி.   இவர் தமிழக அரசால் கடந்த ஜன்வரி மாதம் சேன்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.  அன்று முதல் இவர் தொடர்ந்து தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து துறையில் மட்டுமின்றி மக்களிடையேயும் நல்ல பெயரை ஈட்டி உள்ளார்.

சமீபத்தில் இரவு நேரத்தில் தன்னுடைய சென்னை வடக்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அவர் சைக்கிளில் ஆய்வு செய்துள்ளார். அவர் அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.  அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

ரம்யா பாரதியின் இந்த ஆய்வு தொடர்பான காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி உள்ளன. ரம்யா தன்னுடைய பயணத்தை வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் தொடங்கி எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்துள்ளார்.

மேலும் கோட்டை காவல் நிலையம், எஸ்பிளனேட் காவல்நிலையம், பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், ஆர்.கே நகர் காவல் நிலையம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்களுக்குச் சென்று இரவு பணியை ஆய்வு செய்துள்ளார். ரம்யா பாரதியின் இச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.