சென்னை
பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்கிரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை இவர் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில்,-
”கடந்த இரண்டரை ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளரும், ‘பிக்பாஸ்’ பிரபலமுமான விக்ரமனும், நானும் நெருக்கமாகப் பழகி வந்தோம். விக்ரமன் என்னைக் காதலிப்பதாக சொன்னார். அவரிடம் என்னை சட்டரீதியாகத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதை ஏற்கவில்லை.
அவர் என்னைக் காதலிப்பதாக சொல்லி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கி அதில் ரூ.12 லட்சத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார். இன்னும் ரூ.1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். அவர் மீது என்னைக் காதலிப்பதாகச் சொல்லி மோசடி செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன்.
அவர்கள் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டுள்ளது.
கிருபா முனுசாமி கொடுத்த புகாருக்குப் பதிலளித்து விக்ரமன்,
“நானும் கிருபாவும், நல்ல நண்பர்களாகப் பழகி வந்தோம் என்பதே உண்மை. நான் அவரை காதலிப்பதாகச் சொல்லவுமில்லை, நெருக்கமான தொடர்பும் வைக்கவில்லை. அவரிடம் நான் ரூ.11 லட்சம் பணம் வாங்கினேன். ஆனால் ரூ.12 லட்சம் திருப்பி கொடுத்து விட்டேன். நான் அவருக்குப் பணம் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. என் மீது கொடுத்துள்ள புகார் தவறானது என்பதால் சட்டரீதியாக சந்திப்பேன்.”
என்று கூறி உள்ளார்.