கன்னியாகுமரி:
ந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வருகிற ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலைக்கான தயாரிப்புகள் துவங்கி பெரும் அளவில் பரபரப்பாக தயாராகி வரும் நிலையில், மற்ற மாவட்டங்களிலும் ஆஞ்சநேருக்கு பிடித்தமான பிரசாதங்கள் கோவில்களில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் காணப்படும் சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதியிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இதனையொட்டி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.

இதற்காக கோவில் நிர்வாகம் சார்பாக ஒன்றரை டன் கடலை மாவு, ஐந்து டன் சீனி, 150 டின் எண்ணெய், 50 கிலோ ஏலக்காய், 50 கிலோ முந்திரிபருப்பு, 50 கிலோ நெய், 20 கிலோ கிராம்பு போன்றவைகளை கொண்டு ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் நடைபெற்று வருகிறது.

இந்த லட்டுகளை தயாரிப்பதற்காக காங்கேயம் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் சுசீந்திரம் கோவில் வளாகத்தில் வைத்து லட்டுகளை விறுவிறுப்பாக தயாரித்து வருகிறார்கள். இந்த லட்டுகள் ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வாழங்கப்படும்.