நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 7 ஆண்டுக்கு முன், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒரே வளாகத்தில் உயர்நிலைப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் காவேட்டிப்பட்டி, போதுப்பட்டி, லக்காபாளையம், அண்ணாநகர், குப்பம்பாளையம், ரெக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 119 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிட வசதி செய்து தரப்படவில்லை. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஊர் பொதுமக்கள் சார்பில், போதுப்பட்டியில் 2 ஏக்கர் நிலம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், நிதி ஒதுக்கப்படாததால் தற்போது உள்ள கட்டிடத்திலேயே துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி என இரு பள்ளிகளும் இடநெருக்கடியுடன் இயங்கி வருகிறது. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த ஆண்டுகளில் நடந்த அரசுபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவியருக்கு போதிய விளையாட்டு மைதானம் கூட பள்ளியில் இல்லை. போதுமான கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் அங்குள்ள மரத்தடியில் படிக்கவேண்டிய நிலை உள்ளது.வகுப்பறையில் போதுமான மின்வசதியும் இல்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட நபார்டு வங்கி மூலம் ₹ 2 கோடி ஒதுக்கப்பட்டும், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். பள்ளி தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் புதிய கட்டிட வசதி ஏற்படுத்தப்படவில்லை. பல ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடம் இருக்கிறது, குழந்தைகள் இல்லை. ஆனால் போதுப்பட்டி பள்ளியில் அதிகமான குழந்தைகள் படித்தும் வகுப்பறை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.