சென்னை:

சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் சார்பில் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ.பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து வருகின்றன. அதே வேளையில் இபாஸ் வழங்குவதிலும் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பணிக்காக சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பில்  இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக தொடர்புடைய நிறுவனம் முதலில் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கு குறைந்தபட்ச அடிப்படைவசதிகள் இருந்தால் போதுமானது. இதுபோன்று நிறைய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறோம்.

தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்படுவது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் குழுஆய்வு செய்யும். சென்னையில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது முழு வீச்சில் கரோனா தடுப்பு பணிகளை தொடர வேண்டியிருக்கும்.

இப்போது உள்ள சூழலில் சென்னையில் ஊரடங்கு நீக்கம் என்பது சிரமமான ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.