சென்னை,
ங்ககடலில் உருவாகி இருக்கும் கியான்ட் புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. ‘கியான்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள  அந்த புயல், அக். 28, 29ல் ஆந்திராவில் கரை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
வங்க கடலில் இந்தியாவுக்கு தென் கிழக்கு பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், இரண்டு காற்றழுத்த மேல் அடுக்கு சுழற்சிகள் உருவாகி, பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறின. தற்போது  புயலாக மாறி மியான்மரை தாக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த புயல் இந்தியாவை நோக்கி திரும்பி விட்டது.

ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் அக்.,28ல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்க ராணுவத்தின், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கான ஒருங்கிணைந்த புயல் எச்சரிக்கை மையம் வேறு விதமாக எச்சரித்துள்ளது.
தீபாவளி நாளான, அக்.29தேதி அன்று  சென்னையில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் உள்ள ஓங்கோலில் கியான்ட் புயல் கரை கடக்கலாம் என கணித்துள்ளது.
கியான்ட் புயல் குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வங்க கடலில், அந்தமானில் இருந்து, 620 கி.மீ., வடக்கு; வட மேற்கில், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து, 710 கி.மீ., தெற்கு; தென் கிழக்கில், விசாகப்பட்டினத்தில் இருந்து, 850 கி.மீ., கிழக்கில், ‘கியான்ட்’ புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
வங்க கடலில், ஆந்திராவுக்கு கிழக்கு கடற்பகுதியில், நாளை முதல் காற்றின் வேகம், 100 கி.மீ., வேகத்தில் இருக்கும். நாளை, ஆந்திரா கடல் பகுதிக்குள் நுழையும் புயல், அக்., 28ல் விசாகப்பட்டினம் வழியே கரையை கடக்கலாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
giant
இந்நிலையில், ‘கியான்ட்’ புயல் சின்னம் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவித்ததாலும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலுர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கன மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறினர்.
கியான்ட் என்றால் முதலை என்று பர்மா மொழியில் அர்த்தம். 
கடந்த வருடம் போலவே இந்த வருடமும் புயல் மற்றும் கன மழையால் சென்னை தண்ணீரில்  மிதக்குமோ என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.
தீபாவளி நாளான, அக்.29தேதி அன்று  தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புயல் கரை கடக்கலாம் என தற்போதைய தகவல்கள் வந்துள்ளது.