குற்றம்கடிதல்: 4
திருச்சியில் நடந்த ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் வைகோ ”நான் ராஜதந்திரியாக இருந்ததால்தான், தி.மு.க.வால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. நான், சரியான கூட்டணியை அமைக்கவில்லை எனில் திமுக நிச்சயம் ஆட்சி அமைத்திருக்கும்” என்று பேசியுள்ளார். இதைக் கேட்ட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு பயங்கர அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
இதற்கு முன்பும் திமுகவுடன் கூட்டணி சேர ரூ. 500 கோடி வரை தருவதாக விஜயகாந்த்துடன் தி.மு.க பேரம் பேசியது என்று வை.கோ கூறினார். அப்போதுதான் ம.ந.கூ – தே.மு.தி.க கூட்டணி அமைந்திருந்தது. இந்நிலையில் கூட்டணி சேர விஜயகாந்த் பேரம் பேசினார் என்று வைகோ கூறியது விஜயகாந்த்துக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மறுப்பு வெளியிட வேண்டிய நிலைமை தே.மு.தி.க.வுக்கு. ’கூட்டணியில் சேர பேரம் பேசுபவர் என்ற குற்றச்சாட்டை விஜயகாந்த் மீது சுமத்துகிறோமே, அப்படியானால் அதே விஜயகாந்த்துடன் கூட்டணி அமைக்கும் நமக்கு யார் வாக்களிப்பார்கள்?’ என்றெல்லாம் வைகோ கவலைப்படவில்லை. அவருக்கு ஒரே குறி தி.மு.க. மட்டுமே.
ஏற்கனவே வை.கோ அமைத்துள்ள கூட்டணி அ.தி.மு.க.வின் ’பி’ டீம் என்றும் இக் கூட்டணியை அமைப்பதற்காக வைகோ 1,500கோடி ரூபாயை அ.தி.மு.க.விடம் பெற்றிருக்கிறார் என்ற வதந்தியை தி.மு.க.வினர் ஊடகங்களில் பரப்பி வந்தனர்.
இதற்கிடையே தே.மு.தி.க.வை உடைக்க தி.மு.க முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த வைகோ “இதைவிட கருணாநிதி வேறு தொழில் பார்க்கலாம். அது ஆதித்தொழில், கருணாநிதியின் குலத்தொழில்” என்கிற ரீதியில் அருவெறுக்கத்தக்க வகையில், எந்தவித நாகரிகமும் இல்லாமல் பேசினார். இவை ம.ந.கூட்டணிக்கு மேலும் மேலும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியது. இதற்காக வைகோ பகிரங்கமாக மன்னிப்பு கோரினாலும் அது யாரையும் முழுமையாகச் சமாதானப்படுத்தவில்லை.
ம.ந.கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்கிற நாளில், ’தன்னைத் தோற்கடிப்பதற்காக தி.மு.க சாதிக் கலவரத்தைத் தூண்டி விடப் பார்க்கிறது. அதனால் நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று வைகோ அறிவித்து ம.ந.கூட்டணி தலைவர்களை மெற்கொண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
சாதிக் கலவரம், மதக் கலவரம், அடக்குமுறைகளுக்குப் பயந்து தேர்தலில் இருந்து விலகுவது என்றால் பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடவே முடியாது. மக்களை நம்பிக் களமிறங்குவதுதான் தேர்தல் ஜனநாயகம். வைகோவுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால், மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தி.மு.க தோற்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.
இப்போது ’தனது ராஜ தந்திரத்தால்தான் தி.மு.க தோற்றது’ என்று கூறி அதனை உறுதிப்படுத்தியதுடன், மெய்ப்பித்தும் இருக்கிறார். இது மக்கள் நலக் கூட்டணியோடு இருந்துகொண்டு கூட்டணிக்கே வஞ்சகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது.
உண்மையில் ம.தி.மு.க, தே.மு.தி.க, த.மா.கா இல்லாமல் மக்கள் நலக் கூட்டியக்கமாகவே தேர்தலைச் சந்தித்திருந்தால் இதைவிடக் கவுரவமாக இருந்திருக்கும். குறைந்தபட்சம் அ.தி.மு.க. வின் ’பி’ டீம் என்ற அவச் சொல்லாவது இல்லாமல் போயிருக்கும்.
கடந்த 50 ஆண்டுகளாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அமைத்து அதிகார சுகத்தில் திளைத்து ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளாகவே மாறின. இக் கட்சிகளுக்கு மாற்று இல்லாமல் தமிழக மக்களும் மாறி மாறி இக்கட்சிகளையெ ஆட்சியில் அமர்த்தினர். மாற்றுச் சக்திகளாக வாய்ப்புள்ள இடதுசாரிக் கட்சிகளும் மாறி மாறி இக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வந்தன. தேர்தல் நேரத்தில் மட்டும் இடதுசாரி கட்சிகளைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இடதுசாரி கட்சிகளைக் கை கழுவிவிட்டு மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. உலகமயமாக்கலைப் போட்டி போட்டுக் கொண்டு அமல்படுத்தின. இதற்காக இந்துத்வா சக்திகளுடன் கூட்டணி வைக்கவும் அவை தயங்கவில்லை.
தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கூட கண்டிக்கத் திராணியற்ற கட்சிகளாகின.
ஏனென்றால் தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்குரல் எழுவதைக் கார்ப்பரேட்டுகள் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போதும் என்று நினைத்தன. அதன்படி தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இதுவரையில் உதவியாக இருந்துவந்த இடதுசாரி கட்சிகள், தலித் அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகளைப் புறக்கணித்தன; அவமானப்படுத்தின. இலவசங்கள் இருக்கும் வரை சிறிய கட்சிகளின் உதவி தேவையில்லை என்றும் நினைத்தன.
இந்தநிலையில்தான் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டியக்கத்தைத் தொடங்கியது. தேர்தலை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படியே கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் பிரச்சினையில் இக்கட்சிகள் இணைந்து செயல்பட்டு மக்கள் நம்பிக்கையைப் பெற்று வந்தன.
இடையில் மனிதநேய மக்கள் கட்சி கூட்டியக்கத்திலிருந்து விலகியது. ம.தி.மு.க வந்து இணைந்தது. கூட்டியக்கம் கூட்டணியானது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வை.கோ அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ம.ந.கூட்டணியின் பிடி வை.கோ கைக்குச் சென்றது.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே ம.ந.கூ.யை நெளிய வைக்கும் பேச்சுகளை பேசத் தொடங்கினார். முக்கிய முடிவுகளைத் தன்னிச்சையாக அறிவித்தார். தேர்தல் களத்தில் ம.ந.கூ தேர்தல் அறிக்கையை விட வைகோவின் நெளிய வைக்கும் பேச்சுகளே முன்னணி வகித்தது. இதில் ஊடகங்களை மட்டும் விமர்சித்துப் பயனில்லை. வைகோ.தான் இதற்கெல்லாம் முழுமுதற் காரணம். அவரது பேச்சுக்களை ம.ந.கூ தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டி காப்பாற்றினர்.
இப்போது மக்கள் நலக் கூட்டணி அமைத்தது தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதிக்கத்தை அகற்றுவதற்காகவோ மாற்று அரசியல் கொள்கைகளை வென்றடுப்பதற்காகவோ அல்ல, தி.மு.க.வைத் தோற்கடிப்பதற்காக மட்டும்தான் என வெளிப்படையாக அறிவிக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இப்போதாவது வைகோவின் பேச்சை வெளிப்படையாகக் கண்டிக்கப் போகிறார்களா அல்லது மீண்டும் சப்பைக்கட்டு கட்டப் போகிறார்களா என்பதைப் பொறுத்தே மக்கள் நலக் கூட்டணியின் நம்பகத்தன்மை உறுதிப்படும்.
ஒருவேளை மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறிய பிறகுதான் இதையெல்லாம் விமர்சிக்கப் போகிறார்கள் என்றால், பிற கட்சிகளுக்கும் மாற்று அரசியல் பேசுபவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இல்லாமல் போய் விடும் அபாயம் இருக்கிறது.