சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில்  வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குறவர் இன நபர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே திமுக அமைச்சர் கண்ணப்பன் தன்னை சந்திக்கச் சென்ற  விசிக தலைவர் திருமாவளவனை உடைந்த பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து அவமரியாதை செய்த நிலையில், தற்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குறவர் இன தலைவரை பக்கத்தில் வராதே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வன வேங்கைகள் கட்சியினர் ராஜபாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வனவேங்கைகள் கட்சித் தலைவர் ரணியன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்களது  போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சந்தித்து, ரணியன் கோரிக்கை மனு அளிக்க சென்றார. அவரை சந்தித்த அமைச்சர், அவருக்கு உரிய மரியாதை கொடுக்காமல், பக்கத்தில் வராதே அங்கேயே நில் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த ரணியன் தனது சமூக மக்களிடையே குமுறிய நிலையில், அமைச்சரின் அவமரியாதையையும், ஆணவத்தையும்  கண்டித்து தேனியில் குறவர் சமூக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்கச்சென்றபோது அவமதிக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

ரணியனுக்கு இருக்கை இல்லை தம்பி இரணியன் உள்ளிட்டவர்களுக்கு அமர இருக்கைகூட அளிக்கப்படாததோடு, அவர்களை நிற்க வைத்தே பேசி அனுப்பி, பக்கத்தில் வராதே என கூறி அவமதித்தது பெரும் மனவலியைத் தருகின்றது.இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா?

இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சியா? அமைச்சருக்கு கண்டனம் மனு அளிக்க வந்தவர்களின் கோரிக்கை களை ஏற்பது, புறந்தள்ளுவது என்பதையெல்லாம் கடந்து, வந்தவர்களுக்கு உரிய மானுட மதிப்பை அளித்திட வேண்டாமா? இந்த ஆண்டை மனப்பான்மையைத்தான் திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா? வெட்கக்கேடு!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன். கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் குருவிக்காரர்கள், அக்கி பிக்கி, நக்கில்லே போன்ற சமூகத்தினரை குறவர்கள் என அடையாளப்படுத்து வது வரலாற்றுத்திரிபென எடுத்துக்கூறி, குறவர் சமூகத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு கோரும் அவர்களது கோரிக்கை என்பது மிக நியாயமானது.

அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆகவே, வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியன் முன்வைக்கும் கோரிக்கையின் பக்கமிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நிறைவேற்றித் தர முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரணியன் சென்னை  டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என புகார் அளித்துள்ளார். தான்,  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்த போது, தன்னை நாற்காலியில் அமர வைக்காமலும்,  ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாராம்சத்தை கூற முயன்ற போது, தள்ளியே நின்று பேசு என தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.