சென்னை: தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும்  குறவன், குறத்தி  ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.  மேலும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் இருந்து  குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.

இதற்கான உத்தரவை சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறவன் குறத்தி உள்பட நாட்டுப்புற கலைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதாக, நீதிமன்றம் பல முறை குற்றம் சாட்டியது, மேலும், நாட்டுப்புறக் கலைகள் என்ற பெயரில், மலைவாழ் சமூகத்தின் பெயரில் எந்தவித நடன நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜன.11-ம் தேதி  உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் ‘கரகாட்டம் உட்பட ஆடல் – பாடல் நிகழ்ச்சிகள், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதையடுத்து சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில்,  ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது.

மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் – பாடல் நிகழ்ச்சிகள், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்து வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் செயல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து,  தற்போது,   கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.