நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் அவர்களது முகநூல் பதிவு:
குமுதம் கேஸ் என்னது என்று மீடியாவுக்கு வெளியே உள்ள நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக சுருக்கம்.
எஸ்.ஏ.பி.அண்ணாமலை செட்டியார் தொடங்கியது குமுதம். நிர்வாகியாக வேலைக்கு வந்த நண்பர் பி.வி.பார்த்த சாரதி அய்யங்காரை பார்ட்னர் ஆக்கினார். 2/3 செட்டியாருக்கு, 1/3 அய்யங்காருக்கு. நல்ல நண்பர்கள். சண்டை வரவில்லை.
அண்ணாமலையின் மகன் ஜவகர் பழனியப்பன் டாக்டர். அமெரிக்காவில் செட்டிலானார். இதய சிகிச்சையில் ஓகோ என்று தொழில் போனது.
பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் இங்கே நிர்வாகத்தை கவனித்தார். நாள்போக்கில் எடிட்டோரியல் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார். வேறு பல வேலைகளும் செய்து தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார்.
அந்த வேலைகள் ஜவகர் பார்வைக்கு சென்றதும் அவர் கணக்கு கேட்டார். விவகாரம் வெடித்தது. சமூக, அரசியல் பெரியவர்கள் சமாதானம் பேசினார்கள்.
உடன்பாடு ஏற்பட்டது. ரிப்போர்ட்டர், சிநேகிதி வரதராஜனுக்கு; குமுதம் உள்ளிட்ட ஏனைய 7ம் ஜவகருக்கு. இருவரும் கையெழுத்து போட்டனர்.
பிரிந்து செல்ல கெடு நெருங்கியதும் வரதராஜன் மனம் மாறினார். ஒப்பந்தம் செல்லாது என்றார். கையெழுத்து போட நிர்பந்தம் காரணம் என்றார்.
அதோடு நிற்கவில்லை. வெளிநாட்டு பிரஜையான ஜவகர் இந்திய பத்திரிகை கம்பெனியில் பங்குகள் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை; ஆகவே குமுதத்தில் அவருக்கு உரிமை இல்லை என்றார்.
ரிசர்வ் பேங்க், கம்பெனி லா போர்ட் விசாரித்தன. ஜவகர் வெளிநாட்டு பிரஜை ஆனபிறகு குமுதம் பங்குகளை வாங்கவில்லை; வாரிசு என்ற முறையில் கிடைத்த பங்குகள் வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கின.
வரதராஜன் விடவில்லை. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்டை – ஈடி – அணுகினார். அதில்தான் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அவரது முயற்சிகள் தோற்று, ஜவகரின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன.
ஜவகருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். கிருஷ்ணா மெய்யம்மை. எழுத்தாளரும்கூட. சில காலம் எடிட்டோரியல் பொறுப்பை கவனித்த அனுபவமும் உண்டு. அவரும் அவரது தாயார் கோதை ஆச்சியும் குமுதம் வளாகத்துக்குள் நுழைய முடியாதவாறு கெடுபிடி காட்சிகள் வரதராஜனால் அரங்கேற்றப்பட்டது.
25 கோடிக்கு மேல் வரதராஜன் மோசடி செய்ததாக கோதை ஆச்சி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எழுபது வயதாகும் குமுதம், ஜவகர் தலைமையில் அடுத்த அத்தியாயத்தை இளமைத் துடிப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.