யானை தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க 4 கும்கி யானைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று ஒடிசா அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக வனம், சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை செயலர் சுப்ரியா சாஹூவுக்கு ஒடிசா மாநில வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சத்யபிரதா சாஹு, அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ்நாடு கும்கி யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு நோக்கத்திற்காக வெற்றிகரமாகப் பயிற்றுவித்து பயன்படுத்தியுள்ளது. ஒடிசாவில் மனித-யானை மோதல் ஏற்படும் பகுதிகளில் நிறுத்துவதற்கு நான்கு கும்கி யானைகளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கும்கி யானைகள் எங்கள் வனவிலங்கு அமைப்புக்கு விலைமதிப்பற்ற சொத்தாக செயல்படும் மற்றும் மனித-ஜம்போ மோதல்களை குறைக்க உதவும்” என்று சத்யபிரதா சாஹு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு ஏற்படும் சேதம், மனித வாழ்விடங்கள் மற்றும் உயிரிழப்பைக் குறைப்பதற்காக, ஒடிசா வனத் துறை அதிகாரிகளுக்கு காட்டு யானைகளை நிர்வகிப்பதற்கும் விரட்டுவதற்கும் கும்கி யானைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கும்கி யானைகள் காடுகளில் ரோந்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
அதற்காக நான்கு கும்கி யானைகளுடன் யானை பாகன்களையும் அனுப்புமாறும் ஒடிசா மாநில யானை பாகன்களுக்கு அவற்றை கையாள்வதில் பயிற்சி அளிக்கவும் தமிழக அரசிடம் ஒடிசா அரசு கோரிக்கை வைத்துள்ளது.