கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட  ரூ. 1.12 கோடி இழப்பீட்டை வழக்கறிஞர் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். .

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் ஆர். மகாதேவன், வி. பார்த்திபன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் தமிழரசனை கண்டித்து, உத்தரவு பிறப்பிக்கும் முன்பு இழப்பீட்டு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். . இந்த வழக்கை வரும் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கடந்த 2004, ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா ஆங்கிலப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 மாணவர்கள் பலியாயினர். அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க முன்னாள் நீதிபதி கே. வெங்கடராமன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை இழப்பீடு வழங்க இந்தக் கமிட்டி பரிந்துரை செய்து இருந்தது.

ஆனால், இந்த இழப்பீடு தங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என்றும், தங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் தமிழரசன் முறைகேடாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுதாரர்களில் ஒருவரான யு. மாரிமுத்து தனது மனுவில், ”10 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. என்னுடைய வங்கிக் கணக்கில் கடந்த 2016, டிசம்பர் 21ஆம் தேதி இழப்பீடு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

 

ஆனால், எங்களது சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். தமிழரசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பகோணம் வந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தேதி குறிப்பிடாத இரண்டு வங்கிக் காசோலைகள் மற்றும் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கினார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி எனது (மாரிமுத்து) வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 2.30 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. உடனடியாக வங்கிக்கு சென்று விசாரித்தேன். அப்போது வழக்கறிஞர் தமிழரசு பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதை அறிந்தேன். . இதேபோல் மற்றவர்களின் பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.

வழக்கறிஞர் தமிழரசு செய்தது மிகவும் மோசடி வேலை. , சட்டத்திற்கு புறம்பானது.  அவரது கட்டணத்திற்கு என்று ஒவ்வொருவரும் தலா ரூ. 3,500 கட்டணம் என்று மொத்தமாக இதுவரை கட்டணமாக ரூ. 3.5 லட்சம் செலுத்தி இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.