அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை,கும்பகோணம் வட்டம்,
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்து, பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று “சுவாமிகள் துறை” என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது.
இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார். குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.
பழமையான கோயில். 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. கொடி மரம் இல்லை. பலி பீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் 3 நிலைகள் கொண்டது. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சன்னிதி. முன்னால் விசாலமான கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவற்றில் சன்னிதியை பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. விசாலமான பிரகாரம். கோஷ்ட மூர்த்தங்களாக நடன வினாயகரும், பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தியும், அடுத்து இலிங்கோற்பவரும், பிரம்மனும், துர்கையும் உள்ளனர்.
நால்வர் பிரதிஷ்டையில் பரவை நாச்சியாரும் இடம் பெற்றுள்ளார். வெளிச்சுற்றில் வினாயகர் சன்னிதியும், அடுத்து சுப்பிரமனியர், கஜலக்ஷ்மி சன்னிதிகளும் உள்ளன. மூலவர் பெரிய கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. முன் மண்டபத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் “பாரவன்காண்” என்று தொடங்கும் பாடலில் “பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்” என்று பாடியுள்ளார்.
இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டதும், பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது.
திருவிழா:
சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
பிரார்த்தனை:
குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து 11 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கவும், உடல் மெலிவைப் போக்கவும் இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள்நிறைவேறியவர்கள்இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வசதிபடைத்தோர் அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
வழிகாட்டி:
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், சாக்கோட்டை சென்று அங்கு இடப்புறம் சிவபுரம் என்று கைகாட்டி காட்டும் சாலையில் 3 கீ மீ சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வாசல் வரை வாகனங்கள் செல்லும். அரசலாறு பக்கத்தில் ஓடுகிறது