சென்னை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த பாதயாத்திரை நாளை மாலை 4 மணிக்கு காந்தி நினைவு மண்டபம் முன்பு தொடங்குகிறது. நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 60 கேரவன்கள் அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது.
பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக, ராகுல்காந்தி இன்றிரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தர உள்ளார். நாளை சென்னையிலிருந்து காரில், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். ராகுல்காந்தியின் வருகையையொட்டி, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.