நாகர்கோவில்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.பி., வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு  போட்டியாக காங்., மாநில மீனவரணி செயலாளரான குளச்சல் சபின்  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. இந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவருக்கு எதிராக  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீனவர் அமைப்பின் செயலாளர் சபீன் என்பவர் நேற்று சுயேச்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபீன்,   ”சில மாதங்களுக்கு முன்பு என்னை காங்கிரஸ் கட்சியினரே தாக்கினர்.  இதனால் நான் காயம் அடைந்தேன் என்றவர், மீனவர்கள் அதிகமாக வாழும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மீனவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை. இதனால் தான் மீனவர்கள் பலத்தை நிரூபிக்க தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்றார்.