டில்லி:

பாகிஸ்தானால் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று முன்னாள் உள்துறை செயலாளரும் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பியுமான ஆர்.கே. சிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்தாக, இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த மார்ச் 3ம் தேதி அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்த இது குறித்த வழக்கின் முடிவில் குல்பூஷனுக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குல்பூஷன் ஜாதவ்

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஈரானில் தொழில் நடத்தி வந்த குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானுக்கு கடத்தி வந்து கைது செய்திருக்கிறது அந்நாட்டு உளவுத்துறை. விரைவில் அவர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவார்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், “குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் உளவுத்துறை  கொடூரமாக துன்புறுத்தி  கொலை செய்திருக்கலாம்” என்று  முன்னாள் உள்துறை செயலாளரும் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்பியுமான ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

வி.கே. சிங்

மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில், “ பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதனை மறைக்கும் விதமாக மரண தண்டனை என்ற விசாரணை கதையை அந்நாடு  உருவாக்கி உள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் இதுவரையில் ஏற்கவில்லை. ஆகவே  குல்பூஷன் ஜாதவ் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது தாங்கள் மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் நாளையே அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது” என்று ஆர்.கே.சிங் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.