தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா. ஆண்டுதோறும் தசரா திருவிழா புரட்டாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஸ்தலத்தில் சிவன், பார்வதி இருவரும் ஞானமூர்த்திஸ்வரர் முத்தாரமன் சமேதகராக காட்சி அளிக்கின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசை முத்தாரம்மன் கோயிலில் வெகு விமரிசையாக தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மஹிஷா சூரசம்ஹாரத்தை காண நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் திரள்வது வழக்கம். அதுபோல, இக்கோவிலின் சிறப்பு அம்சமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, காளி, புலி, குரங்கு உள்ளிட்ட பல வேடங்கள் அணிந்து ஆடிபாடி வழிபட்டு வருவர். முன்னதாக, பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று காப்பு கட்டுவதும் வழக்கம்.
இந்த விழாவில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொள்வது வழக்கம். புகழ்பெற்ற இந்த தசரா திருவிழா தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பிருந்தே, இதில் வேஷம் போடுவதாக நேர்த்திக்கடன் செய்திருப்பவர்கள் விரதமிருக்க துவங்கிவிடுகிறார்கள். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஆட்டம் பாட்டமென ஆரவாரமாக நடைபெறும். விசேஷ பூஜைகள், தேர்பவனி, அன்னதானம் என 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாவது நாளில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, மைசூரு தசராவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் குலசேகரப்பட்டினத்தில் தான் நடைபெறுகிறது.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாவட்ட நிர்வாகம் காப்புகட்டுதலுக்கு தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தசரா திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் உள்பட கோவில் நிர்வாகிகள், முக்கிய அதிகாரிகள், தசரா குழுவினர் கலந்துகெண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர்,
இந்த ஆண்டு தசரா விழா வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குவதாக தெரிவித்தவர், கொடியேற்றத்தின்போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவித்தார்.
இந்த ஆண்டு கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது.
முக்கிய திருவிழா நாட்களான 1வது, 10வது 11வது ஆகிய திருவிழா நாட்களின்போது, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மற்ற நாட்களில் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால், அதற்கு ஆன்லைன் அனுமதி பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
விழாக்காலங்களில், சுவாமி புறப்பாடு வெளியில் செல்லாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறும். அதுபோல் உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறும்.
திருவிழா நிகழ்வுகளை யுடியூப் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம்.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிஷேக பொருட்கள் பெற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை.
பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 30-ந் தேதிக்கு பின் தமிழக அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி இயக்குனர் (பஞ்சாயத்துகள்) உமாசங்கர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.