டெல்லி:  காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி சலூன் கடையில் முகச்சவரம் செய்த நிலையில், அப்போது சலூன் கடைக்காரரிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளத் தில் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

`எதுவும் மிச்சமில்லை’ என பார்பர் கூறியது,  இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது என கூறி மத்திய அரசை சாடியுள்ளார்.

 மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ்  எம்.பி.யுமான  ராகுல் காந்தி டெல்லியில் உள்ள சலுன் கடைக்கு சென்று முகச்சவரம் செய்தார். அப்போது  அஜித் எனப்படும் அந்த  சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். இதை வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் தனது கருத்தையும் பதிவிட்டு உள்ளார். அதில்,  “அஜித்பாய் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமையை எடுத்துரைக்கின்றன.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.

எனவே வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.

திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ராகுல் காந்தியின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது.