சென்னை: பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, யுடியூபர் மதன் ரவிச்சந்திரன் மாநில பா4க தலைவர் அண்ணாமலை மீது புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டிஜிபிக்கு 6 பக்க அளவில் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அண்ணாமலையிடம் ஒப்புதல் பெற்றே, கே.டி.ராகவன் விவகாரத்தை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யூடியூபர் மதன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது டிஜிபிக்கு 6 பக்க புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த பாலியல் வீடியோவை, அதே கட்சியைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். இதுகுறித்து கூறிய மதன் ரவிச்சந்திரன்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனே,  பாஜக-வில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மறுபுறம் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும் பாஜகவிலிருந்து நீக்கி  மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்திருந்தார். அப்போது,  வீடியோ வெளியிட்டதில் மதனுக்கு உள்நோக்கம் இருக்குமோ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதற்கு ஆதாரமாக அண்ணாமலை தங்களிடம் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.  அதில், கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிடுவதற்கு முன் அண்ணாமலையை சந்தித்து பேசியதாகவும், அப்போது, கட்சி பெண்ணுக்கு நீதி தேவை என்பதால், வீடியோவை வெளியிடுமாறு அவர் கூறியதாகவும் மதன் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோவை வெளியிட்டபிறகு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும், உங்கள் பக்கம் எப்போதும் நிற்பேன் என்றும் அண்ணாமலை கூறியதாகவும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக அலுவலகத்தில் உள்ள கட்சித் தலைவர் அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது என அண்ணாமலை கூறியதாகவும், அதனாலேயே தனது அறைக்குள் எந்தப் பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை என அண்ணாமலை பேசியதாகவும் மதன் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

கே டி ராகவன் வீடியோ சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், அண்ணாமலை குறித்த ஆடியோக்கள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது திடீரென மதன் ரவிச்சந்திரன், அண்ணாமலைமீது புகார் கூறி, டிஜிபிக்கு 6 பக்க கடிதம் அனுப்பி உள்ளார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.