சென்னை:
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்ப்பதைவிட கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கிற்கு பாடம் புகட்டவும், தமிழகத்தை வஞ்சிக்கிற செயல்களுக்கு துணைபோகிற அ.தி.மு.க. வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றிடவும், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளன.

தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்ப்பதைவிட கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தேர்தல் கதாநாயகனாக விளங்கி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல இன்றைக்கு தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில்கொண்டு, தொலை நோக்கு பார்வையோடு வெளியிடப்பட்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தமிழ் நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதை நிறைவேற்ற திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்துக்கான சட்டம், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, சிறு,குறு விவசாயிகளின் கடன் ரத்து, மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மீனவர்களுக்கு மானியம் ஆகிய அறிவிப்புகள் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை நிச்சயம் பெறும்.

மதவாத பாசிச சக்திகளுக்கு துளியளவும் தமிழ் நாட்டில் இடம் கொடுக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது கொள்கை கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்பதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது.

எனவே, தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை வருகிற சட்ட மன்ற தேர்தலில் மக்களின் பேரா தரவோடு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க. தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட அடித்தளமாக இருக்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.