சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ராமர் மீது காங்கிரசுக்குக் கோபமில்லை எனக் கூறியுள்ளார். 

அசாம் மாநிலத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ளார்  அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர் , மேலும் ஸ்ரீ சங்கர்தேவ் சத்ரா கோவிலில் ராகுல்காந்தி வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

இவற்றைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சிறப்புரை ஆற்றி உள்ளார்.

அவர் தனது உரையில்,

“காங்கிரஸ் கட்சி ராமருக்கு எதிராக இல்லை. மகாத்மா காந்தியைப் போல ராமரைப் புகழ்ந்தவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை. எல்லா மதங்களுக்கும்  காங்கிரஸ் அவர்களது உரிமையைத்  தருகிறது.  ஆனால் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பாஜகவினருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடக்கிறதா ? இல்லை பாஜக மாநாடு நடக்கிறதா? 

உள்துறை அமைச்சர் பணியைப் பிரதமர் மோடியால் செய்ய முடியாது.  அதைப் போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு வைணவர்களோ, ஆச்சாரியார்களோ, சாமியார்களோ தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.  ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காகப் பிரதமர் ஏன் விரதம் இருக்கிறார்? 

பிரதமர் ஏன் தரையில் படுத்து உறங்குகிறார்? ஏனெனில் பாஜகவினர்  2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் பெயரால் வாக்கு சேகரிக்கத் திட்டமிடுகின்றனர்.   

ராவணனுக்கு வேண்டுமானால் ராமர் மீது கோபம் இருக்கலாம் காங்கிரஸுக்குக் கோபம் இல்லை. எனவே பொய் பிரசாரம் செய்து மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தாதீர்கள்” 

என்று தெரிவித்தார்.