மாமல்லபுரம்: மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலை செய்தால் திமுகவுக்கு எதிர்த்து குரல் கொடுக்க தயங்க மாட்டோம், தட்டி கேட்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பது தொடர்பாக மாமல்லபுரத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் கூடி  தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கூடி விவாதித்தனர். அதில் கட்சியின் பலவீனம், இளைஞர்களை களத்தில் கொண்டுவருவது, பேரறிவாளன் விடுதலை, திமுக அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள்  உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  மாமல்லபுரம் கூட்டத்துக்கு பிறகு கட்சியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.  முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள். நிர்வாகிகள் தெரிவித்த பல்வேறு விஷயங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சி பதவி வழங்குவதில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டோம். அதைத் தொடர்ந்து,  100 மாநில செயலாளர்கள் நியமித்தோம். அதில் 50 சதவீதத்துக்கும் மேல் 50 வயதுக்கும் குறைவானவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் அதிகார பரவல் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். முன்பெல்லாம் 10 முக்கிய தலைவர்கள் கூடி பேசுவார்கள். மற்றவர்கள் வெளியே நிற்பார்கள். அதிகார பரவல் வர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல் முறையாக 250 நிர்வாகிகளுடன் மாமல்லபுரத்தில் கூடி அமர்ந்து பேசி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தமிழக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களைகளையும் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை என்றவர், தமிழகஅரசு சொத்துவரி உயர்வை அரசு கொண்டு வந்ததும் உடனடியாக எதிர்த்து குரல் கொடுத்தோம் என்றவர், மக்கள் விரோத  செயல்கள் செய்தால், அதை தட்டிக்கேட்க தயங்க மாட்டோம், எதிர்த்து பேச வேண்டிய சூழல் வந்தால் எதிர்த்து குரல் கொடுப்போம் என்றார்.

மேலும்,  பேரறிவாளனை விடுதலை செய்ததையும், அதை திமுக கொண்டாடியதையும் நாங்கள் வரவேற்கவில்லைஎன்றவர், இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்றதுடன், ராஜீவ் கொலை வழக்கின் மற்ற 6 பேர் விடுதலை விவகாரத்திலும் விடுதலை செய்வதாக இருந்தால் விடுதலை செய்யட்டும். அப்படி செய்தால் கோவையில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதுகுறித்து பேச வேண்டிய இடத்தில் பேசுவோம் என்றார்.

கூட்டணி என்பதற்காக மக்கள் நலனை  காங்கிரஸ் கட்சி ஒரு போதும் கைவிடுவதில்லை என்றவர், எதற்கெடுத்தாலும் எதிர்த்து குரல் கொடுப்பது என்பது,  உண்மையான தோழமை ஆகாது என்றவர், அதேவேளையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.