கிருஷ்ணசாமி – திவ்யா

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பெயரில் சிலர் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுப்பதாகவும் அவர்களுக்கு கிருஷ்ணசாமி அறிவுரை கூற வேண்டும்  என்றும் “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.

கையால் மலம் அள்ளும் கொடுமை தொடர்வதையும், அவற்றில் ஈடுபடும் ஏழை மக்கள் படும் துயரையும் தனது “கக்கூஸ்” ஆவணப்படத்தில் பதிவு செய்திருந்தார் இயக்குநர் திவ்யபாரதி. இது நாடு முழுதும் பரவலாக அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த ஆவணப்படத்தில், தேவேந்திரகுள வேளாளர்கள் (பள்ளர்) இன மக்களும் கையால் மலம் அள்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று திவ்யபாரதி தெரிவித்திருப்பது தவறானது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்பகுதியை நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை அலைபேசியில் அழைத்த சிலர் அவதூறாக பேசினர். இந்த அவதூறு அழைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்கின்றன.

இந்த நிலையில் இன்று திவ்யபாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “கடந்த சில நாட்களாக எனக்கு வெளிநாடுகளிலிருந்தும் பல  அலை பேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை ஒரு பெண் என்றும் பாராமால் இழிவாக பேசுகின்றனர்.

கக்கூஸ் என்ற குறும்படம் வரவேற்பு பெற்றுள்ளது. அதனை தவறாக புரிந்து கொண்டு ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை இழிவாக பேசுவதாகக் கூறி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்.

இப்படி இழிவாகப்  பேசுபவர்கள்  பலர், தங்களை கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி  அறிவுரைவழங்க வேண்டும்.

சில சமயங்களில் வந்த அழைப்பை சோதனை செய்தால் பாஜக- கட்சியினரின் பெயர்களாக இருக்கின்றன” என்றார்.

மேலும், “கக்கூஸ் குறும்படத்தை  தடை செய்யக்கோரி நீதிமன்றம்  செல்லப் போவதாக கிருஷ்ணசாமி  தெரிவித்துள்ளார். அதை அவர் கைவிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.