சென்னை:  கிருஷ்ணகிரி கிங்ஸ்லி தனியார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் விசுவசூபம் எடுத்துள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தகொண்டதும், அதனால், அவரது தந்தை அதிகஅளவில் மது அருந்தி சாலையில் விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை   தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம்  மற்றும் கைது செய்யப்பட்டவரின் மர்ம மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்   முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆக.5 முதல் 9-ம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்சிசி) பயிற்சி முகாம் என்சிசி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் போலியாக நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும்  முகாம் நடைபெற்ற கிருஜ்ணகிரி கிங்ஸ்லி கார்டன் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த ஆக.9-ம் தேதி கலையரங்கில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில் எழுப்பிய என்சிசி பயிற்றுநரும் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அந்த பள்ளி தாளாளர் உள்பட சிலர் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட  அந்த மாணவி மற்றும் அவரின் பெற்றோர்  அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் அனுமதி இல்லாமல் இதுபோல ஏற்கெனவே போலியாக என்சிசி முகாம் நடத்தியிருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு்ள்ளார். தமிழக அரசின் சமூகநலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரனும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவராமன், எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை அதிகஅளவில் மதுஅருந்திக்கொண்டு, வாகனத்தில் சென்றபோது, தடுமாறி சாலையில் விழுந்து தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி. சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும், என தெரிவித்தனர்.  அதையடுத்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் இதுதொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கைது செய்யப்பட்ட சிவராமன், அவரது தந்தை உயிரிழப்பு…