சென்னை,
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து கிருண்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நீர் இன்னும் 4 நாட்களில் பூண்டி ஏரி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
krishna-water
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுதோறும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரியில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் கேட்டு பெறவில்லை.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி ஜூலை மாதத்தில் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டு கொண்டனர்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடா மற்றும் கர்னூல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து கடந்த வாரம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கண்டலேறு அணைக்கு வர தொடங்கி உள்ளது.
தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து,  ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தமிழகத்துக்கு மேலும்  2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதன்படி ஆந்திராவில் உள்ள  கண்டலேறு அணையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறக்கப்படுவதாகவும்,   தண்ணீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை வெயில் காரணமாக கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. ஆகையால் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தண்ணீர் 158 கிலோ மீட்டர் கடந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்க்கு 3 நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு சென்றடைய மேலும் ஒரு நாள் ஆகும்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 18.58 அடியாக பதிவானது. வெறும் 142 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீரும், பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 25 கனஅடியும் மொத்தம் 97 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.