இந்தூர்,
ந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது.
அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. 321 ரன் வித்தியாசத்தில் இந்தியா தொடர் வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துகொண்டுள்ளது.

இந்திய வீரர்கள் மகிழ்ச்சி
இந்திய வீரர்கள் மகிழ்ச்சி

இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி சுழற்பந்து வீரர் அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 90.2 ஓவர்களில் 299 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.நியூசிலாந்து அணி பாலோ ஆனை தவிர்க்க 358 ரன் எடுக்க வேண்டும். அந்த அணி 59 ரன் குறைவாக எடுத்ததால் ‘பாலோஆன்’ நிலையை எட்டியது. ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘பாலோ ஆன்’ கொடுக்கவில்லை.
விராட் கோலி
விராட் கோலி

258 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன் எடுத்து இருந்தது.
முரளி விஜய் 11 ரன்னிலும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். காம்பீர் 6 ரன்னில் இருந்த போது காயம் அடைந்தார்.
காம்பீர்
காம்பீர்

இன்று (செவ்வாய்க் கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 276 ரன்கள் முன்னிலை கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.
49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
அப்போது, ரகானே 23 ரன்களுடனும், புஜாரா 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 475 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. காம்பீர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே ரன்களை அடித்து ஆட முயன்றாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தது.
புஜாரா
புஜாரா

அஸ்வினின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் வருவதும் அவுட் ஆவதுமாக இருந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 153 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருந்த நிலையில், 4-வது நாளில் இந்தியா வெற்றி பெற்றது.
குறிப்பாக, இன்றைய ஆட்டத்தில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து கடைசி விக்கெட்டை இழந்தது.
அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஜடேஜா இந்த இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.
aswin
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதேபோல், இந்த தொடரில் மொத்தம் 27 விக்கெட்டுகள் கைப்பற்றியதால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.