அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருசமயம் பெருமாள் அவனது கனவில் தோன்றி, தாமிரபரணி நதிக்கரையில், புன்னை வனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். தான் கனவில் கண்டபடியே ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலருக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினான். சுவாமிக்கு கிருஷ்ணசுவாமி என்ற பெயரும் உண்டு. இக்கோயில், “கிருஷ்ணன் கோயில்‘ என்றால்தான் தெரியும்..
வேணுகோபாலர், மூலஸ்தானத்தில் கையில் புல்லாங்குழல் வைத்து வாசித்தபடி, வலது காலை சற்றே பின்புறமாக மடக்கி, மோகன கோலத்துடன் காட்சியளிக்கிறார். தலைக்கு மேலே, 9 தலைகளுடன் ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு அருகில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் இருக்கின்றனர். இவர் எப்போதும் தாயார்களை விட்டு பிரிந்து செல்வதில்லை. கருட சேவையின்போதும், தாயார்களுடன்தான் எழுந்தருளுகிறார். பொதுவாக கோயில்களில் தீர்த்தவாரி திருவிழாவின்போது, சுவாமியின் பிரதிநிதியாக சக்கரத்தாழ்வார்தான் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுவார். ஆனால் இங்கு சுவாமியே, தாயார்களுடன் தாமிரபரணிக்கரைக்குச் சென்று தீர்த்தவாரி காண்கிறார். இதேபோல் வைகுண்ட ஏகாதசியன்று தாயார்களுடன்தான் சொர்க்கவாசல் கடக்கிறார். இவ்வாறு இத்தலப் பெருமாள், தனது பத்தினியரைப் பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, “நித்ய கல்யாணப் பெருமாள்” என்றும் பெயருண்டு.
வைகாசி பிரம் மோற்ஸவத்தின் 9ம்நாளிலும், வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளிலும் சுவாமிக்கு “மோகினி அலங்காரம்” செய்யப்படுகிறது. வருடத்தில் இந்த இரண்டு நாட்கள் மட்டுமே சுவாமியை, தனித்து தாயார்கள் இல்லாமல் தரிசிக்க முடியும்..
தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது. மூலவர் வேணுகோபாலரின் சிலை, சாளக்ராமத்தால் செய்யப்பட்டது. எனவே, தினமும் காலையில் எண்ணெய்க்காப்பும், அதன்பிறகு பால் திருமஞ்சனமும் செய்கிறார்கள். உற்சவர், மூலவரின் அமைப்பிலேயே காட்சி தருகிறார்.
இங்கு சுவாமி, நவக்கிர தோஷங்களை நீக்கும் மூர்த்தியாக அருளுகிறார். எனவே கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் இவருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சியால் தோஷம் ஏற்பட்டவர்கள், இவருக்கு சனிக்கிழமைகளில் எள்சாதத்தை படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற, புதன்கிழமைகளில் இவருக்கு பச்சைப்பயிறு படைத்து வழிபடுகிறார்கள். முன் மண்டபத்தில் வடக்கு நோக்கி “பக்த ஆஞ்சநேயர்‘ இருக்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கண்திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடக்கிறது. அன்று ஒரு தேங்காயை சுவாமி பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களை திறக்கின்றனர். கிருஷ்ணர் பிறந்ததன் ஐதீகத்தில் இவ்வாறு செய்கின்றனர். அதன்பின்பு சிறிய சங்கில், பால் எடுத்து அதை உற்சவமூர்த்திக்கு புகட்டும்படியாகப் பாவனை செய்வர். அதன்பின்பு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல் தானியத்தைப் பிரசாதமாகத் தருகின்றனர். கிருஷ்ணர் பிறந்தபிறகு உலகு செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும்வகையில் நெல் தானியப் பிரசாதம் தருகின்றனர். இத்தலத்தில் மூலவரின் மேல் உள்ள விமானம் பத்மவிமானம் எனப்படுகிறது.
வைகாசியில் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கும். இவ்விழாவின் ஐந்தாம் நாளில் இங்கு நடக்கும் “ஐந்து கருட சேவை” மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று வேணுகோபாலர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள நவநீதிகிருஷ்ணர், லட்சுமிநாராயணர், சுந்தர்ராஜர், புருஷோத்தமர் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமிகள் இங்கு எழுந்தருளி கருடசேவை காண்கின்றனர். சுவாமி புன்னை வனத்தின் மத்தியில் எழுந்தவர் என்பதால், பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், புன்னை வாகனத்தில் எழுந்தருளுகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளிலும் கருடசேவை உண்டு.
திருவிழா:
வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தைவெள்ளியில் ஊஞ்சல் உற்ஸவம்.
பிரார்த்தனை:
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழவும், குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் விரைவில் வரன் அமைவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
வழிகாட்டி :
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இக்கோயில் உள்ளது.